புதன், ஏப்ரல் 25, 2018

ஆரணி ஊரணியில் பரணி


ஆரணியில் ஜேம்ஸ் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார்.
ஏப்பா ஆரு நீ ?
* * * * * 01 * * * * *

என்னய்யா சொல்றீங்க பழத்தை தின்னதாலே ஆஸ்பெட்டல்ல சேர்த்து இருகீங்களா ?
ஆமாய்யா ஏடிஎம் மிஷின்ல எடுத்த வந்த பதிமூவாயிரம் சம்பளத்தையும் தின்னுடான்யா.  
* * * * * 02 * * * * *

கனகா ரெடியா ?
யோவ் யாரை கேக்கிறே பூக்காரின்னா உனக்கு இளக்காரமா போச்சா ?
உன்னை இல்லேமா கனகாம்பரம் ரெடியான்னு கேட்டேன்.
* * * * * 03 * * * * *

மதுரை பஸ் ஸ்டாண்ட்டில்...
ஐயா தர்மம் பண்ணுங்க துரை
என்ன மச்சான்... பிச்சைக்காரனுக்கு கூட உங்க பேரு தர்மதுரைன்னு தெரியுதே ?
* * * * * 04 * * * * *

மேனகா ஆபீஸூக்கு நேரமாச்சு டிபன் ரெடியா ?
அவ யாருங்க மேனகா ? என் பேரு மோகனாங்கிறதை மறக்குற அளவுக்கு செஞ்சது ?
* * * * * 05 * * * * *

ஏலே அண்ணாச்சி மீனாட்சி அத்தாட்சிக்கு என்னாச்சு ?
அட யேண்டா நீ வேற அவ அன்னாசி பழத்தை கடிச்சு வாயெல்லாம் புண்ணாச்சு.
* * * * * 06 * * * * *

என்ன சினிமா பார்த்துட்டு வர்றீங்க ?
செருப்பு பிஞ்சுடும்.
அதுக்கு யேண்டா இப்படிச் சொல்றே ?
அண்ணே படத்தோட பேரே அதுதாண்ணே...
* * * * * 07 * * * * *

செல்லம்மா வந்தாச்சு எல்லாரும் வாங்க, வாங்க...
யோவ் எம் பொண்டாட்டி வரும்போது, என்னய்யா பேசுறே ?
நான் செல்லம்மா ரோடுவேய்ஸ் பஸ் வந்துருச்சுன்னு சொன்னா நீ சம்மந்தமில்லாம சம்மந்தப்படுத்துறே.
* * * * * 08 * * * * *

ஏண்ணே அப்பாவை பெத்தவரை ஏன் தாத்தான்னு சொல்றாங்க ?
இருக்குற சொத்தை சீக்கிரம் எழுதி, தா தா கேட்டு கடைசியில் தாத்தான்னு ஆகிடுச்சு.
* * * * * 09 * * * * *

ஏண்ணே "பெற்ற மகனை விற்ற அன்னை"னு சொல்றாங்களே அப்படி எல்லாம் நடக்குமா ?
ஏண்டா உன் அம்மாகூடத்தான் போன வருஷம் உன்னை வித்துச்சு.
என்ணண்ணே சொல்றே ?
ஆமாடா கல்யாணத்தன்னைக்கு பொண்டாட்டி கையில புடிச்சு கொடுக்கிறாங்கள்ல அதத்தான் சொல்றாங்கே.
* * * * * 10 * * * * *

காணொளி
நான் நீச்சல் கற்ற ஊரணி

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...


நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்தங்களோ, மனஸ்தாபம் வந்தால் ஒதுங்கி விடலாம் ஆனால் சாஸ்திரம் பார்த்து சொந்த பந்தங்கள் கூடி நின்று வாழ்த்தி ஊர் அறிய திருமணம் செய்த கணவனோ, அல்லது மனைவியோ விருப்பமில்லை என்றால் ஒதுங்கி விடமுடியுமா ? கடைசிவரை இருவரும் வாழ்க்கையை இழுத்துக் கொண்டுதானே போக வேண்டியதிருக்கின்றது இந்த சமூகத்தில் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு வாழும் நண்பர்கள் எத்தனையோ ?
நண்பிகள் எத்தனையோ ?
இது சரியா ?
தவறா ?
இதற்கு தீர்வு இருக்கிறதா ?
இருக்கிறது ஆம் இருக்கிறது.
இதனைக் குறித்து பேசுவது யார் ?
அலசி ஆராய்வது யார் ?
முடிவில் தீர்ப்பு சொல்வது யார் ?
எல்லாமே இரண்டே பேர்தான்.
ஆம் எல்லாமே இரண்டே பேர்தான்.
யாரந்த இரண்டு பேர் ?
கணவனும், மனைவியும் மட்டுமே...
இதற்கு இரண்டு பேருமே நியாயமான நியாயம் பேசும் அறிவாளிகளாக இருத்தல் அவசியம் Ego என்னும் அரக்கனை மனதிலிருந்து வெளியேற்றிய பிறகே இதனைக் குறித்து பேசமுடியும் விட்டுக் கொடுத்தலில் இருவருமே நீயா ? நானா ? என்று போட்டி போடவேண்டும்.

கணவன் மனைவிக்குள் ஆயிரம் விடயங்கள் இருக்கும் முதலில் இருவருமே உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தல் அவசியம் தன்னை குற்றப்படுத்தி விட்டாளே... என்றோ, விட்டானே... என்றோ நினைத்தல் கூடாது பேசும் விடயங்கள் ஆணித்தரமாக, ஆக்கபூர்வமாக, நியாயமாக, அதையும் இதமாக, கனிவாக, பணிவாக பேசுதல் வேண்டும், அதைவிட முக்கியம் இருவருமே மீண்டும் இணைந்தே வாழப்போகிறோம் என்ற சிந்தனையே மேலோங்கி இருக்க வேண்டும் தவறு தன்மீதெனில் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை தவறு என்மீதுதான் மறப்போம் என்றாலே போதுமானது மன்னிப்பு கேட்குதலும் கூடுதல் மகிழ்ச்சியைத்தரும் அதேநேரம் மன்னிப்பு கேட்டவரை இகழ்ச்சியாக பார்த்தலும் கூடாது அதுவே மீண்டுமொரு பிரச்சனைக்கு ஆரம்பமாகி விடக்கூடும் பேசும்போது இருவரும் கண்களை நேருக்குநேர் பார்த்து பேசுதல் மிகவும் முக்கியம் சுவற்றைப்பார்த்து பேசுதல் கூடாது நீங்கள் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பதில் தயக்கம் ஏன் ? எத்தனை முறைகள் இந்தக்கண்கள் சந்தித்து காதல் மொழிகள் பேசி இருக்கின்றன... மேலும் பேசும் பொழுது பேச்சில் சிறிய இடைவெளி அவசியம் அவை புரிதலை அதிகப்படுத்தும் பேசும் பொழுது எதிரெதிர் உட்காரக் கூடாது அருகருகே இருத்தல் மிகமிக அவசியம் பேசும் பொழுது தொட்டு பேசுதல் ஏற்படும் தருணத்தில் தொட்டுப் பேசவேண்டும் அந்தத் தொடுதலும் கையைப்பற்றிக் கொண்டு பேசும் வார்த்தைகளாக இருந்தால் மிகவும் சிறப்பாகும் இதை சண்டை சச்சரவு இல்லாத தம்பதியினரும்கூட செயல் படுத்திப்பாருங்கள் உண்மை விளங்கும்.

தொடுதல் அன்பை வெளிப்படுத்தும் இதன் காரணமாகவே எதிரெதிர் உட்காருதல் கூடாது என்றேன் வேறு காரணமல்ல... அரபு நாடுகளில் சமாதானம் ஆனவுடன் கை கொடுத்துக் கொள்வதுகூட இதனால்தான் இருக்கும் என்பதும் எமது தனிப்பட்ட கருத்து ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று நகைச்சுவையாக காண்பிப்பார்கள் உண்மையில் இது ஒரு நல்ல விடயமே கோபத்தைக் குறைத்து பகைவனையும் நண்பனாக்கி விடும்

இந்த இருவரின்றி பேச்சு வார்த்தைக்கு மூன்றாம் நபரொருவர் வரும் பொழுது இருவருமே அவரிடம் தனது தன்மானத்தை உயர்த்துவதிலேயே குறியாகி பிறரை குற்றவாளியாக்கியே தீரவேண்டும் என்ற சிந்தை மட்டுமே இருக்குமேயின்றி வேறில்லை அதிலும் மனைவி கௌரவக் குறைச்சலாக மூன்றாம் நபரின் முன் ஒரு வார்த்தை சொல்லும் பொழுது இயல்பான ஆணின் குணம் அந்த இடத்தில் கோபத்தையே வெளிப்படுத்தும், அதில் மனைவியும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதவர் என்றால் ? பிரச்சனைகள் மேலும் வளருமே தவிர குறைவது சாத்தியமில்லை மேலும் நாட்டு ஆமையாக நுழைந்த மூன்றாம் மனிதர் நல்லெண்ணம் இல்லாதவராயின் மேலும் எதையாவது பற்றவைத்து மூட்டி விட்டு விடுவார் காரணம் இன்று நாட்டில் இந்த மாதிரியான சகடைகள் நிறைய திரிகின்றது மூன்றாம் நபர் மனைவியின் சகோதரர் ஆனாலும்கூட சாத்தியங்கள் குறைவே காரணம் வந்தவர் தனது சகோதரியை எப்படியாவது வாழவைத்து விடவேண்டும் என்றுதான் பேசுவார் ஆனால் கணவன் மைத்துனரிடம் தனது வெட்டி பந்தா காட்டுவார், சகோதரி தனது சகோதரனிடம் தனது குடும்பத்து வறட்டுக் கௌரவத்தை நிலை நாட்டி பேசுவார் இதுவே பிரச்சனைகளை மேலும் வளர்த்து விடும் ஆகவே மனம் விட்டு பேசுங்கள் உங்கள் மனக்குறைகளை பேசுங்கள் பேசி மட்டுமே தீர்க்கமுடியும் வாழ்க்கை வாழ்வதற்கே...

கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் இரவில் கூடிக்கொள்வார்கள் என்ற பழஞ்சொல் உண்டு இது என்னைப் பொருத்தவரை தவறு என்பேன். இரவுக்கு முன்பே பேசிக்கொள்ளுதல் வேண்டும் இதுவே உண்மையான அன்பு இரவில் கூடினால் அது உடலுக்காக, இரவுக்கு முன்பே பேசினால் அது உணர்வுக்காக, உண்மையான அன்புக்காக.. இருவருக்கும் சண்டை வந்து சமாதானமான பிறகு சேர்ந்து கொண்டால் இதில் வெற்றியாளர் யார் தெரியுமா ? நடந்ததை மறப்போம் என்று முதலில் சொல்பவர் யாரோ அவரே வெற்றி பெற்றவர் அவள்தானே வலியக்க வந்து பேசினாள் ஆகவே நாம்தான் வெற்றி பெற்றோம் என்று கணவனோ, அவர்தானே வலியக்க வந்து பேசினார் ஆகவே நாம்தான் வெற்றி பெற்றோம் என்று மனைவியோ நினைத்தால் ? அவர்கள் இருவருமே அறிவீணர்களே... விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கடைசிவரை வரும் உறவு அதாவது மரணம்வரை இதுதானே நமது தமிழ்க் கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது பெற்ற மக்கள் இடையில் வந்தவர்கள் இடையிலேயே போய் விடலாம் ? ? ? இனிவரும் காலங்களில் இதுவே எழுதப்படாத விதி விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன ? அவர்கள் உணர்வின், உடலின், உயிரின் பாதியல்லவா !
மனம் விட்டு மணம் பெறுங்கள் வாழ்க வளமுடன்.

நட்பூக்களே இதெல்லாம் உமக்கு எப்படித் தெரியும் ? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் இதோ எமது பதில்...

இதை எல்லாம் சொல்லித்தர அன்று எனக்கு யாருமே இல்லை நான் இந்த உலகப் பிறவிப்பயனில் 99 சதவீதம் இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டு இருந்தவன், இருப்பவன் நான் வாழ்ந்தது மிக மிக மிக மிக குறைவு இந்த உண்மை அறிந்தவர் மூவர் மட்டுமே முதலாமாவர் நான், இரண்டாமாவர் மறைந்து விட்ட என்னவள், மூன்றாமாவர் என்னையும், என்னவளையும் படைத்து, இணைத்து, பிரித்து விட்ட இந்த உலக மேலாளன். அந்த இழப்பின் ஏக்கம், விரக்தி எனது எதிரிக்குகூட வேண்டாம் என்று இவ் உலக மேலாளரிடம் வேண்டிக் கொள்கிறேன் எனது இந்த வயதுக்குள் பிரிந்திருந்த நான்கு தம்பதிகளை நான் சேர்த்து வைத்து இருக்கின்றேன் அவர்களில் மூன்று தம்பதிகள் இன்றுவரை நலமுடன் வாழ்கிறார்கள் இத்தனையும் நான் அபுதாபியில் வாழ்ந்து கொண்டு இருந்தபோது இனி எனது மரணகாலம் வரை... எனது வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனது அனுபவத்தின் காரணமாய் இந்த எண்ணங்களை பகிர்ந்தேன் இதைப்படித்து இந்த உலகமே கடைப்பிடிக்க வேண்டுமென்று நான் நினைத்தால் அது எனது அறியாமை இதைப்படித்து ஏதாவதொரு பிரிந்த கணவன் மனைவி சேர்ந்தால் எனக்கு ஆத்ம திருப்தி நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும் என்று ஆத்மார்த்தமாய் நம்புகிறேன்.

நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
-சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள் குடமுருட்டி.

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

அவள் நடந்து போனாளே...


அவள் நடந்து போனாளே
என்னை கடந்து போனாளே
நான் பார்க்கும் போது
அவள் பார்க்காமல் போனாளே

அவள் எனக்கா பகையானாள்
நான் அவளாள் புகையானேன்
அவள் அவனுக்கு தாரமானாள்
நான் எனக்கே பாரமானேன்

தேரோடும் வீதிக்கு நான்
அவளை தேடி போனேனே
எனை தேவையில்லை என்றாளே
நான் தேம்பி தேம்பி அழுதேனே

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
காரணம் அவள் இல்லை என்
வாழ்க்கை விளங்கவில்லை
இனி ஏதும் விளக்கமில்லை

அவள் நடந்து போனாளே
என்னை கடந்து போனாளே
நான் பார்க்கும் போது
அவள் பார்க்காமல் போனாளே


இதோ பாடலின் யூட்டியூப் இணைப்பு

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

கொன்றால் பாவம் தின்றால் போகுமா ?


பலரும் நான் சைவம் அசைவம் சாப்பிட மாட்டேன் என்பதை பெருமைப்பட பேசுவதோடு அசைவம் சாப்பிடுபவர்களை ஏதோ இரக்கமற்றவன் என்பது போல் நினைக்கின்றார்கள் இறைவன் படைப்பில் ஒன்றை ஒன்று உண்டு வாழவேண்டும் என்பதே நியதி யார் ? உயிரினங்களை உண்ணவில்லை சைவம் சாப்பிடுபவர்கள் செடி கொடிகளை உண்ணவில்லையா ? அதில் உயிர் இருப்பதால்தானே வளர்கிறது உதாரணம் கடலில் உள்ள மீன், நண்டு மற்றும் மற்ற உயிரினங்களை நாம் சாப்பிடக்கூடாது என்று வைத்துக் கொள்வோம் என்னாகும் ? கடலில் உயிரினங்கள் பெருகி பெருகி இடப்பற்றாக்குறை காரணமாக கடலின் நீர் எங்கு வரும் வெளியேதானே அதாவது நாம் வாழும் பூமிக்கு வரும் இல்லையா ? பிறகு நாம் எங்கு போவது கடலுக்கா ? இறைவன் இப்படியெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்றே ஏதோ ஒரு மனிதனை அதைப்பிடித்து சுட்டுத்திண்ணும் யோசனையை கொடுத்து இருக்கிறான் அதைப் படித்துக் கொண்ட நாமும் அவ்வழியே வாழ்ந்து கொண்டு போகிறோம் அதைப்போல ஆடு மாடுகளை மனிதன் உண்ணவில்லை என்றால் ? பூமியில் மனிதர்கள் நடக்க இடம் கிடைக்காது அதைவிட முக்கியம் அவைகளுக்கு உணவு ? ? ? மனிதன் தனக்கு நாளை உணவு வேண்டுமே என்ற சிந்தையில்லாமல் விவசாய நிலங்களை விற்று மாளிகைகள் கட்டிக்கொண்டு இருக்கும்போது கால்நடைகளைப்பற்றி நினைப்பானா ? சைனா நாட்டுக்காரன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான் என்று கேவலமாக பேசுகிறோம் இதன் பின்னணி என்ன ?

உதாரணம் எங்களது வீட்டில் இதுவரை மாட்டுக்கறி சமைத்ததில்லை அதன் காரணமாக நானும் உண்ணவில்லை ஒருவேளை எனது வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அதை சமைத்துக் கொடுத்து பழக்கியிருந்தால் நானும் அதை உண்பதை பெரிதாக நினைக்காமல் உண்டு கொண்டுதான் இருப்பேன் இதுதான் சூழல் சைனாக்காரன் அனைத்தையும் தின்று பழக்கி கொடுத்தான் அவனது சந்ததியினரும் அதைத் தொடர்கிறார்கள் மேலும் ஒரு உதாரணம் நமது குழந்தையை கைக்குழந்தையாக இருக்கும்போது ஏதோவொரு சைனாக்காரனுக்கு தாரை வார்த்து கொடுத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம் அந்தக்குழந்தை அங்கு எப்படி வாழும் தேவகோட்டை குழந்தைபோல் வாழுமா ? இதுதான் சூழல் //பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டு எனக்கு வேணும்// இந்தப் பழமொழியை சொல்லித் தந்தது யாரு ? தமிழனா ? சைனாக்காரனா ? இந்தியாவில் இன்றும்கூட மனிதனின் சுட்ட சடலங்களை திங்கின்றானே மனிதன் இது அருவருப்பு இல்லையா ? சைனாக்காரன் கரப்பான் பூச்சியை தின்பதை தவறாக சொல்கிறோம் நாம் கணவாய் சாப்பிடுவதில்லையா ? நண்டு சாப்பிடுவதில்லையா ? இது அருவருப்பு இல்லையா ? நமக்கு சாதகமானால் மட்டும் சரியானதா ? அவன் புழுவைத் தின்பதை சொல்கிறோம் நாம் திங்கவில்லையா ? ஆம் மீனை பிடிப்பதற்கு புழுவை உணவாக கொடுத்து மீனைப்பிடித்து அதனோடு புழுவையும் சேர்த்துதானே தின்கிறோம் உணவு வகைகள் மட்டுமல்ல வாழ்க்கை முறையும் இடத்தை பொருத்தே அமைகிறது. அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்த சிலர் மிகவும் புத்திசாலிகளாகத்தான் இருந்திருக்கின்றார்கள் அதேநேரம் அசைவம் சாப்பிட்டவர்கள் கத்தியையும், அருவாளையும் எடுத்துக்கொண்டு குத்திக்கொண்டு வாழந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது உண்மைதானே...


நண்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு சிறுவயதில் பள்ளி விடுமுறையில் பாம்பன் சின்னம்மா வீட்டுக்கு போய் விடுவேன் எனது சின்னம்மா எனக்காக பெரிய தூக்குச்சட்டி நிறைய நண்டு பொரித்து தருவார்கள் அதை எடுத்துக் கொண்டு பாம்பன் ரயில் பாலத்துக்கு போவேன் அதன் மத்திய பகுதிக்கு வந்து கூடுபோல் இருக்கும் தலைக்கு மேலே ரயில் போய்க் கொண்டு இருக்கும் அதில் உட்கார்ந்து தின்பேன். எவ்வளவு நேரம் தெரியுமா ? குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் அப்படியானால் எவ்வளவு நண்டு நீங்களே கணித்துக் கொள்ளுங்கள் அது ஒரு நிலாக்காலம் தோணியில் போயி பிடித்து வருபவர்களிடம்தான் சின்னம்மா வாங்குவார்கள் ஐஸ் அந்த வேளையே கிடையாது இவ்வளவு நண்டுக்கு பணம் எவ்வளவு கொடுப்பார்கள் தெரியுமா ? கூடுதல் போனால் ஐந்து ரூபாய் இன்று அந்த நண்டுகளின் விலை ? நினைத்துப் பார்த்தால் தண்டுவடம் சிலிர்க்கிறது.


சிவாதாமஸ்அலி-
இப்ப என்னதான்யா  சொல்றே... இன்னைக்கு வீட்ல பொண்டாட்டி நாட்டுக் கோழியடிச்சு குழம்பு வச்சு இருக்கா திங்கவா வேண்டாமா ?

Chivas Regal சிவசம்போ-
அட ஏய்யா நீ வேறே... கொன்றால் பாவம் தின்றால் போச்சு இஷ்டம் இல்லைனா கஷ்டப்படாதே தூக்குச் சட்டியில அள்ளிப் போட்டு நம்மள்ட்ட கொண்டு வா.

 காணொளி

சனி, ஏப்ரல் 14, 2018

மா(ற்)றவேண்டும்


நட்பூக்களே.... மேலேயுள்ள புகைப்படத்தையும், அந்த வார்த்தைகளையும் படித்தீர்களா ? இதனால் நமக்கு பெருமையா ? சிறுமையா ? நாட்டில் அறியாமைவாதிகள் நிறைந்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றதா ? இந்த நிலையை உருவாக்கிய அந்த ஜடங்கள் நம் நாட்டிற்கு தேவைதானா ? அவன் எமது குடும்ப அங்கத்தினராயினும் அவசியமில்லை என்பதே எமது கருத்து இந்த ராணுவ வீரர்களுக்கு போகின்றதே சம்பளம் யாருடைய பணம் எங்கிருந்து போகிறது இவரென்ன நாட்டுக்கு உழைத்து ஓய்ந்த தியாகியா ? தனது குடும்பத்துக்காக எல்லோரையும் போல விளையாண்டு உழைத்து அதன் மூலம் விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாரித்து இருக்கிறார். யாரோ ஒரு அத்தக் கூலிக்காரன் மலைகளில் பைக் ஓட்ட, அதை பக்கத்தில் காண்பிக்கும்போது இவர்தான் ஓட்டியதுபோல் காண்பிக்க இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்களோ ? என்று நான் கேட்கமாட்டேன் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவது ? என்பதே கேள்வி. நச்சுத்தன்மை நிறைந்தது என்று உலகறியப்பட்ட குளிர்பானத்தை குடிப்பதுபோல் நடித்து காண்பித்து அதன் மூலம் கோடிகள் சம்பாரித்தவர் இது தியாகச் செயலா ? இவர் மட்டுமல்ல நிறைய பேர் உண்டு.


இப்படிப் பட்டவர்களுக்கு இந்த சமூகம் உயிரைக் கொடுக்க நினைப்பது ஏன் ? மதுரையின் ஒரு தெருவுக்கு இவரது பெயர் இவன் பிறந்த மாநிலத்தில்கூட இப்படி பெயர் வைக்கவில்லையே... தமிழ்நாட்டான் மட்டும்தான் ஏமாளியோ இந்த விட்டில் பூச்சிகள் நாட்டிற்கு அவசியமே இல்லை இதே வேலையின் பயிற்சியை நமக்கும் கொடுத்து அதில் நாம் முயற்சி எடுத்தால் நம்மாலும் விளையாட முடியும் இதில் உயிரைக் கொடுக்க கூடிய கஷ்டங்கள் இல்லை ஆனால் மேலே நிற்கிறார்களே ராணுவ வீரர்கள் அவர்களைப்போல் எல்லோராலும் வரமுடியாது எந்த நொடியும் நாட்டுக்காக உயிர் துறக்க தயாராக இருக்கும் மாமனிதர்கள் இவர்கள் இத்தனை செய்தும் நிறைய சம்பளம் பெற முடியவில்லையே ஏன் ?  நல்ல உணவுகூட கிடைக்கவில்லையே ஏன் ? உண்மையில் இவர்கள்தான் நிஜ நாயகர்கள். எந்தவொரு அரசியல் தாலைவனோ, திரைப்பட நடிகனோ, கிரிக்கெட் வீரனோ, இதற்கு தயாராக முடியாது ஆனால் யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த நிஜத்தை மறந்து நிழலுக்கு மரியாதை கொடுக்கின்றானே தமிழக பாமரன். விளையாட்டில் வெற்றி தோல்வி இயல்பு வெற்றி பெற்றால் கோயில் கட்டுவதும், தோல்வியடைந்தால் கொடும்பாவி எரிப்பதும் தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது அதை பொழுது போக்காக நினைக்க மறுக்கிறான் மனிதன் ஏன் ? இப்படிப் போன்றவர்களால் நாடு முன்னேறுமா ? இல்லை பின்னேருமா ? இதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள் காரணம் இவர்களைப் போன்ற அறியாமைவாதிகளால்தான் அவர்களின் நிரந்தர உயர்வுக்கு பயன் அளிக்கும்.

மாறவேண்டும் நாம் மாறவேண்டும் நமக்காக அல்ல ! நாளைய நமது சந்ததிகளுக்காகவாவது நாம் மாறவேண்டும்.



 கொசு’’று.
மோடியாவது வந்து நமது வாழ்வாதாரத்தை மாற்றுவார் என்றுதான் எதிர்பார்த்து மக்கள் பெரும்பான்மையாக வாக்கரிசி SORRY வாக்கு அளித்தார்கள் என்னாச்சு ? அவர் பதவி ஏற்று இந்தியாவில் வாழ்ந்ததைவிட வெளிநாடுகளில்தான் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஒருவேளை இதிலும் சாதனை செய்யத்திட்டமோ ? மானத்தை மறைக்க வழியில்லாத ஏழை மக்கள் வழி நெடுகிலும் வாழ்ந்து கொண்டிருக்க... இவர் போடும் ஒரு கோட்-ஸூட் விலை பதினான்கு லட்சங்கள் அவரும் சராசரி மோசடிப் பேர்வழி என்பதை நிரூபித்துக் கொன்று இருக்கின்றார். இனியும் காலம் மாறும் என்று நம்பிக்கொண்டு இருப்பது அறிவாற்றலா ? அறியாமையா ? பொறுமை கடலினும் பெரிது என்று சொன்னவர்களை கடலில் தூக்கிப் போடவேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடுத்து எதிரியை சிந்திக்க வைக்க நாம் காந்திஜி அல்ல, ஒரு அறை வாங்கினால் இரு கன்னத்திலும் அறை விடுவோம் இனியெனும் நேதாஜியைப் போல் கலகம் பிறந்தாலே நியாயம் பிறக்கும் இல்லையேல் நீதி இறக்கும். வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்வோரே... தன் வாழ்நாளில் நீ ஒருமுறைகூட கடமை மீறியது இல்லையோ ? மக்களின் பிரதிநிதிகளிடம் நமது உரிமையை கேட்பது கூடத்தான் கடமை எங்கே ஒரு எம்மெல்யே வீட்டு வாசலின் கேட்டைக் கடந்து உள்ளே போய் விடு பார்ப்போம் ? திரைப்பட நடிகனும், அரசியல் கோமாளிகளும், கிரிக்கெட்காரர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற நாட்டைக்காக்கும் இராணுவவீரனுக்கு சிறிய சம்பளம் இந்த அவலநிலை மாறவேண்டும்.


மாறவேண்டும் நாம் மாறவேண்டும் நமக்காக அல்ல ! நாளைய நமது சந்ததிகளுக்காகவாவது நாம் மாறவேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னரே அதில் நானும் ஒருவனே.

ஸ்வீட் எடு கொண்டாடு
காணொளி
அனுப்பி வைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...